நம் தாயாதிகளின் வரலாறு, தலைமுறை தலைமுறையாக வாய் மொழியாக இறங்கி வந்து, நம் தாயாதிகளில் முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.P.S.R.செண்பகமூர்த்தி அவர்கள் எழுதிக்கொடுத்த வரலாறு.
1420 ஆம் ஆண்டு முதல் 1462 ஆம் ஆண்டு வரை அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் தென்காசியை ஆண்டான். அவன் நாடார் இனத்தைச் சேர்ந்தவன். இவன் தென்காசியில் விஸ்வநாதருக்கும் விசாலாட்சி அம்பாளுக்கும் ஆலயம் எடுப்பித்து, அதில் பிரதிஷ்டை செய்ய, காசியில் இருந்து சிவலிங்கமும், கங்கை நீரும் கொண்டு வந்தான். வரும் வழியில் மல்லி நாட்டில் தண்டு வலித்தான். அவ்வமயம் அரசமாதேவி பூப்பெய்தியதால், அவனது பயணம் தடைபட்டது. சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய, தான் நினைத்த நேரத்தைத் தவற விடக்கூடாது என்றும், தான் இருக்கும் இடம் ஒரு வில்வ வனமாகவும் இருந்தமையால், இது தெய்வ சங்கற்பம் என எண்ணி, சிவலிங்கத்தை அந்த இடத்திலேயே ஸ்தாபிதம் செய்தான். உடன் வந்த பராக்கிரம முனிவர் சிவலிங்க பிரதிஷ்டைக்கு ஆவன செய்தருளினார். கோவிலும் கட்டப்பெற்றது.
சிவலிங்கத்தைக் காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தமையால் அந்த இடத்திற்குச் சிவகாசி என்று பெயர் சூட்டி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம் என்று பெயரும் இட்டான். மேலும் சிவகாசி நகரை உருவாக்கி, தென்காசியில் இருந்து தன் வழியினராகிய நாடார்களை நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் அம்மையடியான், கோட்டை, உளக்கன், கூத்தன் வெற்றி நாடான், கணக்கன், செங்கான், மாலையிட்டான். முக்கந்தன், வள்ளிக்குட்டி. காவடிக்காரன், முண்டன் வகையைச் சேர்ந்தவர்கள்.
இக்கோயிலை முதன் முதலாகப் பெரிது படுத்திக்கட்டியவர் ஆனையப்ப ஞானி என்ற பெரியார். இவர் சிவகாசி நாடார்களில் ஞானியார் வகையைச் சேர்ந்தவர்.
பராக்கிரம பாண்டிய மன்னனின் ஆட்சிக்குப் பின்னர் அவனது சந்ததியருள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக, அவனது சந்ததியே பூண்டற்றுப் போயிற்று.
பின்னர் நாயக்கர் படையெடுப்பு நேர்ந்தது. அதனால் மதுரையிலும், அதைச் சூழ இருந்த இடங்களிலும் வசித்திருந்த நாடார் குல மக்கள் தப்பி, பல்வேறு திசைகளுக்குக் குடிபெயர்ந்து போனார்கள்.
சிலகாலம் கழித்து முகமதியர்கள் படையெடுப்பு நேர்ந்தது. இச்சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த நாடார் குலமக்கள் வடக்கே ஒரு தலை நகரை அமைத்து அங்கிருந்து பொதி எருது வாணிகத்தைத் தொடங்கலாம் என்று எண்ணினார்கள். அவர்கள், நம் குலத்தை சேர்ந்த மன்னன் ஒருவன் ஸ்தாபித்த இடமான சிவகாசிக்கே செல்லுவோம் என்றெண்ணி, இங்கு வரத் தொடங்கினார்கள். அதன் அடிப்படையில் 1820 ஆம் ஆண்டில் நாடார் குலமக்களை அதிகமாகக் கொண்ட முதல் நகரம் சிவகாசி ஆயிற்று.
எந்த ஒரு குடிக்கும் ஏதேனும் ஒரு காரண காரியத்தின் ஆதாரத்திலேயே பெயர் அமைந்துள்ளதைக் காணலாம். அது போன்றே நம் வகையறாவுக்குச் செண்பக்குட்டி என்னும் பெயர் ஏற்பட்டதற்கு ஒரு பின்புலம் உள்ளது. தமிழக நாடார்களின் பூர்வீக வரலாறு என்ற நூல் ஆசிரியர் தென்காசி T.G.செல்வராஜ் நாடார் அவர்களது ஆராய்ச்சியின் படி, பெருங்குடியில் பிறந்த செம்புக்குட்டி வகையறாக்களின் முன்னோர்கள் இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பெருமையுடன் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "தமிழகத்தை நீண்ட நெடுங்காலம் முறை செய்து காப்பாற்றிய ஷத்திரிய சான்றோர்குல நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னோர்களாகிய சேர, சோழ, பாண்டிய மாமன்னர்களில், சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் மாமன்னர் 9 ஆம் நூற்றாண்டில் சேர நாட்டில் இயற்கைக் கனிவளமாகக் கிடைத்த செம்பை, கட்டி கட்டியாக எடுத்து உருக்கி, பெருமளவில் சோழன் கரிகாலனுக்கு அனுப்பி வைத்தபடியால், சேரமான் பெருமாளுக்குச் செம்புக்கட்டி சேரன் என்ற விருதுப் பெயர் கிடைக்கப்பெற்றது" என்று சோழன் பூர்வ பட்டயம் கூறும் "கொங்கு நாட்டு ஊர்கள்'” என்ற வரலாற்று நூல் கூறுகின்றது.
௮ம் மன்னனின் வழித் தோன்றல்களுக்கு, செம்புக்கட்டி என்ற விருதுப் பெயரை குடும்பப் பெயராக வழக்கில் வழங்கி வந்தார்கள். சேர நாட்டில் மாற்றான் ஆட்சி மாற்றத்தாலும், நாட்டில் பெருங் குழப்பத்தாலும், சேர மன்னனின் வழித் தோன்றல்களாகிய செம்புக் கட்டி வகையறாக்கள், சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகாசி நகரில் ஒரு பகுதியில் வந்து குடியேறினார்கள். செம்புக் கட்டி என்பது "செம்புக்குட்டி" என வந்திருக்கலாம்.
இனி, நாம் சிவகாசிக்கு எப்படி வந்தோம் என்பதைச் சற்று ஆராய்வோம்.
முதலில் கூறியது போல, நம் மூதாதையர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்து, சிவகாசிக்கு அருகிலுள்ள தம்மநாயக்கன்பட்டியில் தங்கி இருந்தார்கள். அவர்களுள் முண்டக நாடார் என்பவர் ஒரு முக்கியஸ்தராக விளங்கினார். அவர் ஒரு வீட்டில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மிக நாணயமானவராகவும், உண்மையானவராகவும் இருந்ததால், செட்டியார் அவருக்கு வீடும், ஒரு தோட்டமும் அளித்தார். அவருக்கு ஏழு ஆண் மக்கள் இருந்தனர். மிகப் பெரிய குடும்பத்தைப் பேண முடியாததால் ஏதாவது வாணிகம் செய்ய வேண்டும் என்று விரும்பி, சிவகாசிக்கு நம் தாயாதிகளுடன் வந்து சேர்ந்தார். அவர் முதன் முதலில் வந்து தங்கிய இடமே இன்று சிவகாசியில் "முண்டக நாடார் தெரு" என்று வழங்கப்படுகிறது.
சிவகாசிக்கு வந்து குடியேறிய நாடார்கள் விவசாயமும், புகையிலையை கருப்புக் கட்டியில் நனைத்து, பொதி மாடுகளில் எடுத்துச் சென்று தமிழகமெங்கும் வியாபாரமும் செய்துள்ளனர். (சிவகாசியில் பல இடங்களில் புகையிலை கிடங்கு இருந்தது இன்றும் அனைவரும் அறிந்ததே) அங்கிருந்து பாக்கு, உப்பு, கருவாடு, கருப்பட்டி இவற்றைக் கொண்டு வந்து விற்று வந்துள்ளனர்.
இவ்வாறிருக்கையில் அப்போது மதுரையை ஆண்ட நவாப் மன்னனுக்கு, இப்பகுதியில் வரி வசூல் செய்ய ஒரு தகுந்த ஆள் தேவைப்பட்டது. அதற்கேற்றவர் முண்டக நாடார்தான் என்று தீர்மானித்து மன்னன் அவரை நியமித்தான்.
நம் தாயாதிகள் நம் குல தம்பிரானுக்கு ஒரு கோயில் கட்ட எண்ணி, தற்போதுள்ள செண்பக விநாயகர் திருக்கோயிலை ஸ்தாபித்தார்கள். இதற்கு ஒரு தெப்பம் கட்ட வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்கள். அதன் விளைவாக, தெப்பம் அமையவும், அதற்குத் தண்ணீர் வருவதற்குக் காலாங்கரை ஓடைக்கு கரையெழுப்பவும் உண்டான வேலைகளை ஆரம்பித்தனர். கொஞ்ச நாளில் இவைகளுக்குப் பணவசதி இல்லாமற்போயிற்று. எடுத்த காரியத்தைத் திட்டமிட்டவாறு நிறைவேற்றி விட வேண்டும். பணத்தை எப்படியாவது சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தில், தன் கைவசம் இருந்த அரசாங்கப் பணத்தை முண்டக நாடார் செலவழித்து விட்டார்.
இச் செய்தி அரசாங்கத்துக்குத் தெரிந்து, இவரைக் கைது செய்து, மதுரைக்குக் கொண்டுபோய் குட்டையில் மாட்டிவிட்டார்கள். குட்டை என்பது ஒரு பலகையில் நான்கு ஓட்டைகள் இருக்கும். அந்த ஓட்டைகளுக்குள் ஒரு மனிதனுடைய இரண்டு கால்களையும், கைகளையும் செலுத்தி, அடுத்த பக்கத்தில் முளையடித்துக் கைகளையும் கால்களையும் கட்டி அவரை வெயிலில் அமர வைத்து விடுவதாகும்.
இதைக் கேள்வியுற்று அவர் மகன் அய்ய நாடார் மதுரை சென்று, நவாபை பேட்டி கண்டு தன் சொல் சாதுரியத்தால் அவனை மகிழ்வித்து, தந்தையை மீட்டார். அந்நிலையில் நவாபும் அய்ய நாடாரையே வரி வசூல் செய்ய நியமித்தார். மேலும் அய்ய நாடாருக்கு ஏதாவது வெகுமதி வழங்க விரும்பிய நவாப் என்ன வேண்டும் கேள்: என்று கூற "அரண்மனை முன்கட்டியிருந்த பஞ்சகல்யாணி என்ற குதிரை வேண்டும்” என்றார்.
நவாப் அய்ய நாடாரிடம் "இக் குதிரைக்கு ஆகாத சுழிகள் என்னென்ன உண்டோ அதெல்லாம் இருக்கின்றன. அது யாரையும் தன் மேல் ஏற விடுவதில்லை" என்றார். "நான் ஏறி சவாரி செய்கிறேன்" என்று ஏறி, மதுரையைச் சுற்றி வந்து "இதோ வந்துவிட்டேன்" என்றார் அய்யநாடார்.
நவாப் "நான் இன்னும் சொல்கிறேன், இந்தக் குதிரையைத் தவிர வேறு ஏதேனும் கேள் தருகிறேன்” என்றார். "உங்களிடம் பெறுவதனால், ஒரு குறிப்பிட்ட பொருளைத் தான் பெற வேண்டுமே தவிர, எனக்கு காசு, பணம், நிலம் எதுவும் தேவை இல்லை' என்றார்.
நவாபும் "உன் தலை விதியை மாற்ற என்னால் முடியாது. உன் மனம் போலக் குதிரையைக் கொண்டு செல்: என்றார். ஆனால் நவாப் கூறியபடியே, திருமங்கலத்துக்குப் பக்கத்தில் வந்ததும், அய்ய நாடாரைத் தூக்கிப்போட்டது குதிரை. அய்ய நாடாருக்கு ஒரு கால் முறிந்து விட்டது. அவ்வழியாக வந்த பொதிமாட்டு வாணிகர் அய்ய நாடாரையும் குதிரையையும் மதுரை அரண்மனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். நவாப் மிகவும் மனம் வருந்தி, அவருக்கு வேண்டிய வைத்தியம் செய்து, உடல் நலமுற்றதும், பற்பல விருதுகள் கொடுத்து அந்தக் குதிரை, நூறு போர் வீரர்கள், அவரை ஏற்றிச் செல்ல ஒரு பல்லக்கு முதலியன கொடுத்து. பரிவாரத்திற்குரிய சகல செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
அதிலிருந்து அய்ய நாடார் " நொண்டி அய்ய நாடார்" என்றழைக்கைப்பட்டார் அவர் அஞ்சா நெஞ்சினராய் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். இவர் நமது தெப்பத்து வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இந்த நிலையில் தெப்பத்தின் வேலை நடந்து வருகையில், அவ்வழியாக வந்த திருவனந்தபுர மன்னர் இதைக் கண்ணுற்று, "யார் இந்த வேலையைப் பார்க்கிறார்கள்! என விசாரித்து, ஊர் சென்று, அவ்வமயம் திருவனந்தபுரத்திற்கு வியாபார நிமித்தம் சென்ற அய்யநாடாரை அரச சபைக்கு அழைத்து, இந்த தெப்பம் தம் பெயரால் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால் அய்ய நாடார் இந்த யோசனைக்கு இணங்க அறவே மறுத்துவிட்டார். அவரும் சிவகாசிக்குத் திரும்பி வரவில்லை. இவர் காலத்திற்கு பின்பு இவர் மகன் முண்டக நாடார் அவ்வேலையைத் தொடர்ந்து செய்ய, அவரது தம்பி பழனிச்சாமி நாடார் தன் பணத்தைத் திருப்பணிக்காக அதிகமாகச் செலவழித்தார். அதனால் இவரை தெப்பத்தப்பன் என்று அழைப்பார்கள். இவர் மரணமடைந்ததும் இவர் விரும்பிய படியே, நமது தாயாதிகள் கூடி, அவருக்கு மரியாதை செய்து, நம் தெப்பத்திற்குக் கிழக்கே நமது கோவில் எல்லைக்குள் ஸ்ரீ செண்பக விநாயகர் சந்நிதிக்கெதிரில், அவர் சமாதியை அமைத்தார்கள்.
அதற்குப் பின் முண்டக நாடார் மகன் சுப்பு நாடார் அவருடைய பிள்ளைகள் பெரிய முதலாளி, அ.மு.சு. சண்முக நாடார், சின்ன முதலாளி அ.மு.பா. செண்பக்குட்டி நாடார் (இவர் சுப்பு நாடார் தம்பி பால்வண்ண நாடாருக்குச் சுவீகாரம் வந்தவர்) இவர்கள் முன்னின்று எல்லாக் காரியங்களையும் நடத்தி வந்தனர். பெரிய முதலாளி, சின்னமுதலாளி காலத்தில் கோயில் முன் மண்டபங்கள், திருமதில் முதலியவை கட்டி இருக்கிறார்கள். ராமநாத நாடார், மனைவி காளியம்மாள் என்பவர்களால் கோயில் கோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. தெப்பத்தையும் பழுது பார்த்திருக்கிறார்கள். அப்போது தெப்பத்திற்குத் தண்ணீர் வரக்கூடிய மடை சிறியதாக இருக்கிறது. அதைப் பெரியதாக்க வேண்டும் என்று ஒரு சிலர் அபிப்பிராயப் பட்டிருக்கிறார்கள். ஆனால் சிற்ப சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் எல்லாம் கற்றுணர்ந்த பெரிய முதலாளி, "இது என்ன கணக்கில் இதைச் சிறிய அளவில் வைத்துள்ளார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. காலாங்கரையில் வரக்கூடிய மழைத் தண்ணீர் தேங்கி நின்று தெப்பத்திற்குச் சுத்தமான தண்ணீர் உள்ளே வரவேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணம். அது மாத்திரம் தெரிய வருகிறது. நம் தெப்பத்தினுடைய பரிமாணத்திற்கும் இந்த மடையின் அகலத்திற்கும் அவர்கள் வைத்த கணக்கு எனக்குத் தெரியவில்லை. ஆகவே அதை ஏதும் செய்யாமல் பழுது பார்க்க மட்டும் செய்யுங்கள்". என கூறியுள்ளார்.
அவரது கடைசிக் காலத்தில் ஒரு புதுக் கணக்கெழுதி ஒரு பையைச் சுருட்டிக் கட்டி, அவற்றை அரி.௮. பொன்னுச்சாமி நாடாரிடம் "நீ தெப்பத்தை இனி மேல் பார்த்து வா" என்று கூறிக் கொடுத்திருக்கிறார்.
1901ஆம் வருடம் நம் தாயாதிகளின் சிலரது நன்கொடையின் உதவியால் சிவகாசி அரி.அ.பொன்னுச்சாமி நாடார் அவர்கள் மேற்பார்வையில் ஸ்ரீ செண்பகவிநாயகர் கோவில் முன்புறம் உள்ள கல்மண்டபம் கட்டப்பட்டது.
பெரிய முதலாளி காலத்திற்கு பின் அவரது தம்பி மகன் பா.செ. பாலப்ப நாடாரும், அவருக்குப் பின் அவரது தம்பி பா.செ. இராமசாமி நாடாரும் முன்னின்று தெப்பத்து காரியங்களைப் பார்த்து வந்தார்கள்.
அரி.௮. பொன்னுச்சாமி நாடாருக்கு பின், அவருடைய மகன் விஸ்வநாத நாடார் அவருக்கு பின், நெ.பெ.ஆ.தி. நெல்லையப்ப நாடார் ஆகியோர் கணக்கு வரவு செலவுகளைப் பார்த்து வந்தார்கள்.
நாடார் மஹாஜன சங்கம் ஏற்பட்டு 1921 சாத்தூர் மகாநாட்டில் சங்கரன் கோவில் சங்கரநாராயணர் கோவிலில் உள்ளே நாடார்கள் நுழைவதற்குத் தடை இருந்தது. முன்போல ஆடித்தபசு உற்சவத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, ஆடித்தபசு உற்சவத்தை நம் நாடார் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட கோயில்களில் யாராவது நடத்துவதற்கு இயலுமா? என்ற நிலை ஏற்பட்டது. அதைச் சிவகாசியில் நடத்துவதாக ஒப்புக் கொண்டு நெ.பெ.ஆ.மு. சங்கரலிங்க நாடார் இங்கு வந்து நம் தாயாதிகளின் கூட்டத்தில் சொல்லி ஏற்பாடு செய்து நம் தெப்பத்தில் நடத்தினார்கள். ரா. செண்பகக்குட்டி நாடார் (செ.௮ண்ணாமலை நாடாரின் தந்தை), மா.மு.ச.மு. சங்கரலிங்க நாடார் இவர்கள் ஒத்துழைத்தார்கள்.
அப்போது நம் தெப்பத்துக்கு வடபுறமுள்ள தோப்பு முழுவதும் துணி, சாக்காலான "டேரா: போட்டு மூன்று நாட்கள் சிவகாசி மக்கள் தங்கி இருந்தார்கள். கிராமங்களில் இருந்து வண்டிகள் கட்டிக் கொண்டு வந்தவர்கள் மேற்கு, தெற்குப் பகுதிகளிலிருந்த தோப்புகளில் தங்குவார்கள். நம் தெப்பத்துத் தோப்பின் வடக்கு எல்லையிலிருந்து சாலைக்கிணறு வரையிலும் இரு மருங்கிலும் கடைகள் அமைந்திருக்கும். அவற்றில் வீட்டுக்கு வேண்டிய இரும்பு, மரச்சாமான்கள், சங்கரன்கோயிலிலிருந்து நார்ப் பெட்டி, முறம் இவைகள் பானை, சட்டி வகையறாக்கள், சிறுவர்களுக்கு வேண்டிய விளையாட்டுச் சாமான்கள் அனைத்தும் இங்கு விற்கப்படும்.
தபசு விரதம் முடிந்த மறுநாள், அசைவ உணவிற்காக ஒரு வண்டிக்கும் மேலான விரால் மீன்கள் வந்து விற்குமென்றால், கூட்டம் எப்படி இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். இந்நிலை நாளாவட்டத்தில் குறைந்து 1931 லிருந்து நின்று விட்டது. மீண்டும் 1946லிருந்து அ.மு.சு.ச.பா. சடாட்சர நாடார் முன்னின்று நடத்தினார். அவருக்குத் துணையாக மா.மு.ச. ராஜரத்தின நாடார் இருந்து தெப்ப நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்
1973 ம் ஆண்டு, திரு.N.P.S.S.ரத்தின நாடார் அவர்கள் தலைமையில் ஒன்று கூடி, “இந்து நாடார்கள் செண்பககுட்டி வகையற தாயாதிகள் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு நிர்வாக அங்கத்தினர்களாகச் சிவகாசியிலும் வெளியூர்களிலும் இருக்கக் கூடிய நம் தாயாதிகளுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கொடுத்து கோவில் நிர்வாகத்தை திறம்பட நடத்த ஏற்பாடு செய்தனர். திரு.K.செண்பகமூர்த்தி, திரு.T.ஹரிதாஸ் போன்ற ஆர்வமிக்க இளைஞர்கள் இளந்தலைமுறையினருடன் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள நம் தாயாதிகளை எல்லாம் 1974 மாசி மாதம் நம் குல தம்பிரான் வழிபாட்டுக்கு வரச் செய்து அவர்கள் தங்குவதற்குச் சிவகாசித் தொழில் அறநிலையக் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்து விமரிசையாகக் கொண்டாடினார்கள். 1974ல் புதிய நிர்வாக குழு திரு.பா.செ.ரா.செண்பகமூர்த்தி நாடார் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பெற்றது.
ஸ்ரீ செண்பகவிநாயகர் கோவில் மகாகும்பாபிஷேஹம் நள வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி 21.3.1977 திங்கள் கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து ஆண்டுதோறும் புது நிர்வாகக்குழு அமைக்கப் பெற்று, குடி நீர் வசதி, வருவாய்க்கு வேண்டிய கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதி (சத்திரம்) முதலியன தோற்றுவிக்கப்பெற்றன கும்பாபிஷேகமும் நடத்தி நன்கு செயலாற்றி வருகிறது.