நம் தாயாதிகள் தரிசனத்திற்காக காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரையிலும் மாலை 4:31 மணி முதல் 8:31 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். மார்கழி மாதம் தனுர் பூஜை நடைபெறும் நேரத்தில் கோவில் நடைதிறக்கும் நேரம் மாறுபடும். அம்மாதத்தில் காலை 4:31 மணி முதல் 10.31 மணி வரை மாலை 4:31 மணி முதல் 8.31 மணி வரை நடை திறந்து இருக்கும்.
தினமும் காலை 7:00 மணிக்கு குலதெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். காலை 8:00 மணிக்கு இரவு 7:00 மணிக்கு நைவேத்தியத்துடன் பூஜை நடைபெறும்.
சிறப்புமிக்க இந்த விரதத்தை ஓராண்டு கடைப்பிடித்தால், புத்திர பாக்கியம் பேறு கிடைக்கும் என்று நான்முகன் கூறுவதாக விநாயகர் விஜயம் (விநாயகர் புராணம்) கூறுகிறது.
விரத முறைகள் முழுவதையும் நான்முகன் எடுத்துக் கூறுகிறார். அதில் தேய்பிறை நான்காம் நாள் மாலையில் சந்திரன் தோன்றும் பொழுது, ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்பர்களுக்கு அன்னமிடல் வேண்டும். அன்னதானம் மிகவும் முக்கியம் என்று நான்முகன் வலியுறுத்துகிறார். நம் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை 6.00 மணிக்கு அபிஷேகம் துவங்கும். 7.31 மணிக்கு அன்பர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். நம் தாயாதிகள் சங்கடஹர சதுர்த்தியை ஸ்ரீ செண்பக விநாயகருக்கு நடத்தி பயன் பெறுகிறார்கள்.
மகாலெட்சுமி மனம் கனிய குத்து விளக்கு பூஜை ஒவ்வொரு மாதாந்திர வெள்ளியன்று ஸ்ரீ ஹரிஹர புத்திர அய்யனார் சன்னிதியில் மாலை 5:31 மணிக்கு ஆரம்பமாகும்.
நம் தாயாதி பெண்கள் திரளாக கலந்து கொண்டு அனுக்கிரகம் பெறுகிறார்கள்.
உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி விழாவினை. நாம் நம் ஸ்ரீ செண்பகவிநாயகர் கோவிலில் பத்து நாட்கள் கொண்டாடி மகிழ்கிறோம். அதிகாலை கணபதி ஹோமமும், காலை 9:00 மணிக்கு மற்றும் இரவு 7:00 மணிக்கு லட்சார்ச்சனையும் நடைபெறும். விழாவின் இறுதி நாள் விநாயகர் சதுர்த்தியாகும். அன்று காலை கணபதி ஹோமமும், லட்சார்ச்சனை பூர்த்தியும், மதியம் அன்னாபிஷேகமும் நடைபெறும். (அன்னாபிஷேகம் முடிந்தவுடன் அந்த சமயத்தில் கோவிலில் இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்). அதன் பின் சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறும். மாலையில் புஷ்பாஞ்சலி வண்ணவண்ண பூக்களைக் கொண்டு நடைபெறும். உபயதாரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறும் இவ்விழா, மனதுக்கு இனிமையான வருடாந்திர விழாவாகும்.
நமது கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பெற்று அதிவிமரிசையாக நவராத்திரி கொலு கொண்டாடப்படும். ஒவ்வொரு நாள் மாலையிலும் இரண்டு உபயதாரர்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தாயாதியர் புதுப்புது பொம்மைகளை நன்கொடையாக வழங்கி கொலுவில் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்
தேவர்களுக்கு இரவு முடிந்து, விடியும் நாளாக மார்கழி மாதம் அமைவதால், இம்மாதத்தில் சூரிய உதயத்துக்கு முன் தெய்வ வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது. அக்கருத்துக்கு ஏற்ப உபயதாரர்கள் அதிகாலையில் நம் கோவில்களுக்கு வந்து தீபாராதனையில் கலந்து கொள்கிறார்கள்.
மாசி மாதாந்திர வெள்ளியன்று காலை கணபதி ஹோமத்துடன் வழிபாடு ஆரம்பமாகிறது. இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ செண்பக விநாயகர் கோவிலிலிருந்து அபிஷேக ஆராதனையுடன் பெரும் பூஜை ஆரம்பமாகிறது. பின் அங்கிருந்து மேளதாளத்துடன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர அய்யனார் கோவில் வழிபாட்டிற்கு கிளம்புகின்றனர். அவ்வமயம் நம் குலதெய்வம் ஸ்ரீ ஹரிஹரபுத்திர அய்யனார் அருளாகி உடன் வருகின்றார். பின் ஸ்ரீ ஹரிஹரபுத்திர அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு எல்லா பரிவார தெய்வங்களுக்கும் படையலிட்டு அருள்வாக்குடன் வழிபாடு நடைபெறுகின்றது.
ஆடித்தபசு அன்று சிவகாசி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து காலை ஸ்ரீ கோமதி அம்மன் தவக்கோலத்தில் புறப்பட்டு. நம் கோவில் வளாகத்தில் வீற்றிருப்பார்கள். அன்று மாலை சுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரராக அம்மனுக்கு காட்சி தந்து திருமணம் புரிந்து தம்பதி சமேதராய் மக்களுக்கு காட்சி தருகின்றனர்.
அன்று இரவு 7.00 மணிக்கு மேல் நமது கோவில் தெப்பத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் தெப்பத்தேரோட்ட உற்சவம் நடைபெறுகிறது.
நம் கோவில் வளாகத்திலுல் ஆடித்தபசு காட்சி சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நமது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நமது முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை இடைவிடாது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. நம் தாயாதிகள் மனமுவந்து கொடுக்கும் நன்கொடையால், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுகின்றனர்.
அருள்மிகு முருகன் நம் விநாயகர் கோவிலில், வள்ளி தெய்வானையுடன் காலையில் எழுந்தருள்வார். சிவகாசியில் பெரிய தெப்பம் செண்பககுட்டி தெப்பமாகும். அத்தருணத்தில் நீர் நிறைந்திருந்தால், தெப்பத்தில் தண்ணீரில் மிதக்கும் தேர் அமைத்து, முருகன் வள்ளி தெய்வானையுடன் தெப்போற்சவம் நடைபெறும். தெப்பப்படித்துறையில் பக்த கோடிகள் அமர்ந்து, வடிவேல் முருகனின் அருள் பெறுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். நம் சிவகாசி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் ஆடித்தபசும், தைப்பூசமும் நிறைவாக நடைபெறுகின்றன. இவ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும், சிவகாசியின் தொழிலதிபர்கள் முன்னின்று நடத்தி சிறப்பிக்கிறார்கள்.